சென்னை நகரில் 100 ரூபாய்க்குள் ருசியாக சாப்பிடக்கூடிய சிறப்பு உணவகங்கள்
FEB 13, 2021

1. சென்னை ஆழ்வார்பேட்டையில், கொல்கத்தா சாட் மற்றும் ஜூஸ் வேர்ல்டு (Kolkatta Chat & Juice World) என்ற கடை உள்ளது. எப்பொழுதும் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும் இக்கடையில் பானி பூரி கார சாரமாக மிகவும் ருசியாக கிடைக்கும். அதிலும் அந்த கடைசிப் பூரி, சுக்கா பூரி என சுக்காவை உள்ளடக்கி ஹாட் சாட்டாக தருவார்கள். பிறகு அருகிலேயே ஜூஸ் கடை, காரமாக சாப்பிட்டு விட்டு சற்று ஆசுவாசப் படுத்த அனைத்து வகை பிரெஷ் ஜூஸ்களும் அங்கேயே கிடைக்கும், அதிலும் ஒரு சிறப்பு என்னவென்றால் ஒரு கிளாஸ் ஜூஸ் வாங்கினால் இன்னொரு கிளாஸ் இலவசம். இவை அனைத்தையும் வெறும் 100 ரூபாய்க்குள் முடித்து விட்டு திருப்தியாக திரும்பலாம்.

2. டவுசர் கடை அசைவம் (Trousar Kadai) என்கிற காமாட்சி உணவகம், பெயரே வித்தியாசமாக இருக்குல. நல்ல ருசியான கறிக் குழம்பு, மீன் குழம்பு, கோலா உருண்டை அதுக்கும் மேல ஸ்பெசல் சுறா புட்டு, இந்த மாதிரி எல்லா வகையான அசைவ உணவுகளும் வெறும் 100 ரூபாய்க்குள்ள ருசிக்க இங்க தாராளமாக வரலாம். இந்த டவுசர் கடையோட சொந்தகாரர் ராஜேந்திரன் தாத்தா 1977 இல் இந்த கடையை ஆரம்பிச்சாரு, ஆரம்பத்துல கடையோட பெயர் காமாட்சி உணவகமாகா தான் இருந்தது, ஆனால் ராஜேந்திரன் தாத்தா எப்பவும் டவுசர் போட்டு வேலை செய்வதால் வாடிக்கையாளர்கள் எல்லாம் டவுசர் கடைன்னு கூப்பிட ஆரம்பித்தார்கள், காலப்போக்குல காமாட்சி உணவகம் டவுசர் கடையாக மாறிவிட்டது. ஒரு நாள் ராமகிருஷ்ணா மட் ரோடு, மந்தைவெளியில இருக்குற இந்த கடைக்கு விசிட் அடிங்க கண்டிப்பா 100 ரூபாய்க்குள்ள நல்ல உணவை ருசித்து சாப்பிட்டு விட்டு வரலாம்.

3. சுவையான ஸ்பெஷலான ரோஸ் மில்க் குடிக்கணுமா? கண்டிப்பா அதுக்கு நீங்க மயிலாப்பூர் கிழக்கு மாட வீதியில இருக்க காளத்தி ரோஸ் மில்க் (Kalathi Rose Milk Mylapore) கடைக்கு தான் வரணும். இங்க என்ன சிறப்பா இருக்குதுனு கேட்குறீங்களா? இந்த கடை 1952 - ல ஆரம்பித்தது, இந்த பகுதியில இருக்க நிறைய பேருக்கு இது சின்ன வயதிலிருந்தே ரோஸ் மில்க் குடித்து பழக்கமான கடை. தற்போது வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்திருந்தாலும் தேடி வந்து வாங்கிட்டு போறாங்க. ஒரு பெரியவர் சொல்கிறார் 25 வருடமாக இக்கடையில் ரோஸ் மில்க் வாங்குவதாகவும் மேலும் அமெரிக்காவில் இருக்கும் தனது மகளுக்கு அனுப்பி வைப்பதாகவும் கூறுகிறார்.

4. 150 சான்ட்விச் வகைகளைக் கொண்ட (Royal Sandwich, TTK Road, Alwarpet.) ராயல் சான்ட்விச் கடை டிடிகே ரோடு ஆழ்வார்பேட்டையில் 1999 இல் இருந்து உள்ளது. ஆனால் இங்கு சான்ட்விச் மட்டும் இல்லாமல் வெரைட்டியான பிரெட்ஸ் மற்றும் சாஸ்ஸஸ் கிடைக்கும். இங்கு 30 ரூபாயிலிருந்து வெஜ் சான்ட்விச் கிடைக்கிறது, 50 ரூபாய்க்குள் ருசியான சிக்கன் சான்ட்விச் மற்றும் 60 ரூபாயிலுருந்து இத்தாலியன் ஸ்பெஷல் சான்ட்விச்கள் கிடைக்கிறது. 100 ரூபாய்க்குள் விருப்பமான வெரைட்டியான சான்ட்விச்கள் இங்கு ருசித்து பாக்கலாம்.

5. நம்ம தேவி தியேட்டர் பின்புறமாக எல்லிஸ் ரோட்டுல (Bombay Lassi) பாம்பே லஸ்ஸி -னு ஒரு கடை இருக்கு அங்க லஸ்ஸி ரொம்ப பேமஸ் தான் ஆனாலும் அங்க வேற சில பதார்த்தங்களையும் 100 ரூபாய்க்குள்ள ருசிக்கலாம். எந்த நேரமும் சமோசா, கச்சோடி, பால்கோவா, குலாப் ஜாமுன், ஜிலேபி போன்ற வகை வகையான இனிப்பு மற்றும் காரங்களும் மலிவான விலையில் கிடைக்கும். சரி இப்ப லஸ்ஸி க்கு வருவோம், நீங்க இப்படி ஒரு சுவையில லஸ்ஸி குடிச்சிருக்க மாட்டீங்க. அப்படியே கெட்டி தயிரை கடைஞ்சி அதுக்கு மேல பாலாடையை வச்சி அதுக்கு மேல ஒரு டாப்பிங்ஸ் போட்டு தருவாங்க பாருங்க... அப்படி இருக்கும். கண்டிப்பா இந்த பக்கம் போகும் போது இந்த பாம்பே லஸ்ஸி சாப்பிட்டு பாருங்க செம்மையா இருக்கும்.